சபை வரலாறு

சபை என்ற வார்த்தையின் உண்மையான பொருள்: கிரேக்க மொழியில் உள்ள Εκκλησία (Ekklesia) எக்லேஸியா என்ற வார்த்தையே சபை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றுகூட்டப்பட்ட மக்கள் என்று அர்த்தப்படுகிறது. இதில் உள்ள எக் என்ற வார்த்தை வெளியே என்றும், கலேஸியா என்ற வார்த்தை அழைக்கப்பட்ட மக்கள் என்றும் பொருள்படுகின்றன. எனவே எக்லேஸியா என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்றுகூட்டப்பட்ட மக்கள் என்ற அர்த்தம் தருகிறது. இது ஆங்கிலத்தில் சர்ச் என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மக்கள் கூட்டம்தான் சர்ச் எனப்பட முடியும். மக்கள் கூடிவரும் இடம் சர்ச் ஆகாது. கிறிஸ்தவ வட்டாரத்தில் சபைகூடிவரும் இடம் சர்ச் என்று அழைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இது தவறு. கூடிவரும் இடமானது, சபை கூடும் இடம் என்றுதான் அழைக்கப்படவேண்டும். கூடிவரும் மக்கள் தான் எக்லேஷியாவாக சபையாக சர்ச் ஆக இருக்கின்றோம்.

சபையின் தோற்றம் பற்றிய வரலாறு: நமது கர்த்தரும் இரட்சகரும் கன்மலையுமான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் வந்த ஐம்பதாம் நாளன்று எருசலேமில் கூடியிருந்த அப்போஸ்தலர்கள் பன்னிரெண்டுபேர் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார். அப்போது அவர்கள்

சார்பாகப் பேசிய பேதுரு தமது உரையில் யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்ற இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினார் என்று கூறினார். இதைக்கேட்ட யூதர்கள் இருதயத்தில் குத்தப்பட்டு பேதுருவை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு: நீங்கள் ஒவ்வொருவரும் மனம் திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று கூறினார். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். இவ்வாறு பூமியில் நிலைநாட்டப்பட்ட சபையானது பரலோகத்தை நோக்கிய தனது பயணத்தில் உறுதியாகவும் நேராகவும் சென்றுகொண்டு இருக்கிறது. ஆனால் சபையின் தொடக்க நாட்களில் இருந்தே சபையில் இருந்து பிரிந்து செல்லும் கூட்டம் இருந்துள்ளது. இதைப் பற்றிய வரைபடம் ஒன்று கீழே தரப்படுகின்றது:

 

மேலே உள்ள வரை படத்தில் கிறிஸ்துவின் ராஜ்யம் (கிறிஸ்துவின் சபை) தொடங்கிய நாளில் இருந்து தனது பரலோகம் நோக்கிய பயணத்தைக் கிறிஸ்துவின் உபதேசத்தின் அடிப்படையில் நிகழ்த்துவதை அழுத்தமான நேர்கோட்டு அம்புக்குறி குறிக்கின்றது. தொடக்கத்தில் இருந்து இன்று வரையிலும் கூட கிறிஸ்துவின் உபதேசத்தில் இருந்து வழுவிச்சென்றுள்ள யாவரும் மீண்டுமாக கிறிஸ்துவின் சபைக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மேல்நோக்கிய செங்குத்து அம்புக்குறிகள் குறிக்கின்றன.

உலகில் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிற எந்தக் குழுவும் சபை தோன்றியதற்குப் பின்வந்த ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கப்பட்டதாகவே உள்ளது. நீங்கள் கூடிவந்து தேவனைத் தொழுதுகொள்ளும் சபையின் போதகரிடத்தில் சென்று உங்கள் சபையின் தொடக்க வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக உலகில் உள்ள சபைப்பிரிவுகளுக்கு ஒரு தலைவரும், தலைமையிடமும், அந்தப்பிரிவுக்கென்று மனிதர்களால் நியமிக்கப்பட்ட சட்டதிட்டங்களும் இருக்கும். அவ்வாறு இருந்தது என்றால் அது தேவன் உண்டாக்கிய சபையல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தேவன் சபைக்குத் தலைவராக கிறிஸ்துவையே ஏற்படுத்தினார். தலையாகிய அவருக்குள் நாம் அனைவரும் வளர்ந்து பெருகவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாக உள்ளது. ஆதிகிறிஸ்தவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் என்று வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். இதே நடைமுறையைப் பின்பற்றி இன்றும் உண்மையான சபையானது தொடர்ந்து ஆவிக்குரிய வகையில் வளர்ந்துகொண்டுதான் உள்ளது.

பிரிந்துபோன ரோமன் கத்தோலிக்கர்களும், கிரேக்க ஆர்த்தொடாக்ஸ்களும், புரொட்டஸ்டண்டு சபையினரும், அதிலிருந்து கிளைத்தெழுந்த பல்வேறு பிரிவினைக் கூட்டங்களும், சமீபகாலமாக முளைத்து எழும்பியுள்ள பெந்தெகொஸ்தேக்களும் இன்னும் மற்ற எல்லாரும் கூட கிறிஸ்துவின் உண்மையான ராஜ்யமாகிய சபையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாக உள்ளது. இந்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் நமது பங்கை நாம் நிறைவேற்றுவோம். எல்லா மக்களும் கிறிஸ்துவின் உண்மையான இராஜ்யமாகிய சபையில் ஒன்றுகூட்டப்பட வேண்டும் என்பதற்காக ஜெபிப்போம். தேவன் நம் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

தமிழ்